சிகரம் பேசுகிறது: September 2006

சிகரம் பேசுகிறது

பகிர்ந்துக்கொள்ளாத உணர்வு, ஒளியில்லாத கலங்கரை விளக்கத்துக்கு இணை

Saturday, September 23, 2006

விசனம்

"சரிம்மா.. ஏன் அழுகற, ஒன்னும் இல்ல, கண்ண தொடச்சிக்கோ" என்று சித்ரா விடம் கெஞ்சிக்கொண்டிருந்தான் பாலாஜி.

"என்ன இப்படி தனியா விட்டு போய்ட்டீங்களே.. இந்த சின்ன கொழந்தையை வெச்சிக்கிட்டு தனியா நான் என்ன பண்ணுவேன்.." என்று கதறிக்கொண்டிருந்தாள் சித்ரா.

தன்னால் எவ்வளவோ முயன்றும் சித்ராவை சமாதானப்படுத்தமுடியாததை நினைத்து நொந்துகொண்டான்.

"விடுப்பா.. விடு.." என்று அருகில் இருந்தவர்கள் பாலாஜிக்கு ஆறுதல் சொன்னார்கள்.

நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்காதே என்று விசனப்பட்டான்.

என்ன செய்வது, காலையிலேயே சற்று கவனமாக சாலையை கடந்து இருந்தால் இப்படி ஆவியாக நின்று கொண்டு தன் மனைவி கதறுவதை பார்த்து வருத்தப்படுக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

Sunday, September 17, 2006

குட்டி

"நல்ல இளம் நெஞ்சுக்கறியா குடு பாய்" என்றபடியே சலீம் பாயின் கறிக்கடைக்குள் வந்தார் சங்கர்.

"வாங்க வாத்தியார் சார்" என்று வரவேற்றான் சலீம்.

"என்ன சார் விசேஷம்" என்ற சலீமிடம், "பையனுக்கு உடம்பு சரியில்ல, அம்மா இளம் ஆட்டு நெஞ்சுக்கறிய ஆக்கி போட சொல்லுச்சி, அதான் வாங்க வந்தேன்" என்றார் சங்கர்.

"இதோ 10 நிமிஷம் உக்காருங்க சார், உடனே வரேன்" என்று, பக்கத்தில் தாய் ஆட்டிடம் பால் குடித்து கொண்டிருந்த குட்டி ஆட்டை அறுப்பதற்காக, அப்படியே இரண்டு கையாலேயும் வலுக்கட்டாயமாக தூக்கினான் சலீம்.
கூடவே கட்டப்பட்டிருந்த அந்த தாய் ஆடு, தன் குட்டி எடுத்து செல்லப்படுவதை பார்த்து, கதற ஆரம்பித்தது.

உடனே குட்டி ஆடும், தன்னால் முடிந்தவரை கத்தியது

அதன் "மே.. மே.." என்ற அலறல் சத்தம், சங்கரை ஏதோ செய்ய,
"சலீம், நில்லுப்பா, எனக்கு கறி வேண்டாம்" என்று சொல்லி, விருட்டென்று எழுந்து வீட்டை நோக்கி நடந்தார் சங்கர்.