சிகரம் பேசுகிறது

சிகரம் பேசுகிறது

பகிர்ந்துக்கொள்ளாத உணர்வு, ஒளியில்லாத கலங்கரை விளக்கத்துக்கு இணை

Monday, January 08, 2007

இயோ புத்தாண்டு

மீண்டும் ஓர் புத்தாண்டு.
வருடா வருடம் வருகிறாய்.
இப்போதெல்லாம் நீ வந்தாலே திகிலடைகிறோம்
ஏனென்கிறாயா?....
ஒவ்வொரு வருடமும் நீ அள்ளித்திண்ணும் மனித உயிர்களின் எண்ணிக்கை தான் காரணம்
உனக்கேன் இவ்வளவு பசி?
நாங்கள் தான் உனக்கு நிறைய நர விருந்தளிக்கிறோமே..
தினந்தினம் நூறு உயிர்களையாவது போரிட்டு கொல்கிறோம்...
இருந்தும்,
உன் பசி தான் தீருவதில்லை
அப்பாவி உயிர்களின் நர மாமிசம் உனக்கு பிடித்துவிட்டது
இந்த வருடம் என்ன வைத்திருக்கிறாய்?
என்றாலும் உனக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்
தமிழ் அகராதிக்கு "சுனாமி" என்னும் வார்த்தையை சேர்த்திருக்கிறாய்
அதற்கு நீ கேட்ட கூலி, முப்பதாயிரம் உயிர்கள் !!
இயற்கையே, எங்களை வாழ விடு.
சத்தியமாக சொல்கிறோம். நாங்கள் இறக்கவே பிறந்தோம்..
இயற்கையாக.......
மரணத்தை நாங்கள் தழுவவே போகிறோம்,
எங்களை சில காலம் விழுங்காமல் இரு..
வருக புத்தாண்டே, வாழ விடு.

Tuesday, November 21, 2006

உரிமை

ஏ தமிழா, உனக்கெப்படி உண்ணத்தோணுகிறது?
உன் கண் முன்னே மாபெரும் உரிமைப்போர் நடக்கிறதே,
உனக்கு யுத்த சத்தம் கேட்கவில்லையா?

சற்று சிந்தித்துப்பார்..
40 மைல்களுக்கு அப்பால் உன் இனம் உண்ண உணவேதும் இல்லாமல் தன் உரிமைக்காக ஆயுதமேந்தி யுத்தகளத்தில் !
நீயோ இங்கு குடிபோதையில் உல்லாசமாக தேர்தல்களத்தில் !

பிணம் தின்னும் கழுகுகள் கூட மிகவும் உயர்ந்தவை;
உன் பாடு இன்னும் மோசம்;
அவைகள் கூட இறந்த உடலைத்தான் உண்ணுகின்றன
ஆனால் நீ,
ஆயிரக்கணக்கான உயிர்கள் கண் முன்னே
பிணமாவதை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறாய்

அவர்கள் உன் மக்கள் என்று உனக்கு விளங்குவதற்குள்
அங்கு வெறும் எலும்புத்துண்டுகள் மட்டுமே மிஞ்சும்

விழித்தெழு, நேர்கொண்டு செல், உன்னால் முடியும்
ஒரு ராணுவத்தை எதிர்கொண்டு ஒரு தமிழன் போராடுகிறானெண்றால்,
உன்னாலும் அவனுக்கு துணை நிற்க முடியும்
ஏனென்றால் நீயும் தமிழனே !!!

ஈழத்தில் அமைதி தவழட்டும்;
மீண்டும் குறிஞ்சி மலரட்டும்;
யாழ்பானத்தில், யாழிசை ஒலிக்கட்டும்;

Saturday, September 23, 2006

விசனம்

"சரிம்மா.. ஏன் அழுகற, ஒன்னும் இல்ல, கண்ண தொடச்சிக்கோ" என்று சித்ரா விடம் கெஞ்சிக்கொண்டிருந்தான் பாலாஜி.

"என்ன இப்படி தனியா விட்டு போய்ட்டீங்களே.. இந்த சின்ன கொழந்தையை வெச்சிக்கிட்டு தனியா நான் என்ன பண்ணுவேன்.." என்று கதறிக்கொண்டிருந்தாள் சித்ரா.

தன்னால் எவ்வளவோ முயன்றும் சித்ராவை சமாதானப்படுத்தமுடியாததை நினைத்து நொந்துகொண்டான்.

"விடுப்பா.. விடு.." என்று அருகில் இருந்தவர்கள் பாலாஜிக்கு ஆறுதல் சொன்னார்கள்.

நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்காதே என்று விசனப்பட்டான்.

என்ன செய்வது, காலையிலேயே சற்று கவனமாக சாலையை கடந்து இருந்தால் இப்படி ஆவியாக நின்று கொண்டு தன் மனைவி கதறுவதை பார்த்து வருத்தப்படுக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

Sunday, September 17, 2006

குட்டி

"நல்ல இளம் நெஞ்சுக்கறியா குடு பாய்" என்றபடியே சலீம் பாயின் கறிக்கடைக்குள் வந்தார் சங்கர்.

"வாங்க வாத்தியார் சார்" என்று வரவேற்றான் சலீம்.

"என்ன சார் விசேஷம்" என்ற சலீமிடம், "பையனுக்கு உடம்பு சரியில்ல, அம்மா இளம் ஆட்டு நெஞ்சுக்கறிய ஆக்கி போட சொல்லுச்சி, அதான் வாங்க வந்தேன்" என்றார் சங்கர்.

"இதோ 10 நிமிஷம் உக்காருங்க சார், உடனே வரேன்" என்று, பக்கத்தில் தாய் ஆட்டிடம் பால் குடித்து கொண்டிருந்த குட்டி ஆட்டை அறுப்பதற்காக, அப்படியே இரண்டு கையாலேயும் வலுக்கட்டாயமாக தூக்கினான் சலீம்.
கூடவே கட்டப்பட்டிருந்த அந்த தாய் ஆடு, தன் குட்டி எடுத்து செல்லப்படுவதை பார்த்து, கதற ஆரம்பித்தது.

உடனே குட்டி ஆடும், தன்னால் முடிந்தவரை கத்தியது

அதன் "மே.. மே.." என்ற அலறல் சத்தம், சங்கரை ஏதோ செய்ய,
"சலீம், நில்லுப்பா, எனக்கு கறி வேண்டாம்" என்று சொல்லி, விருட்டென்று எழுந்து வீட்டை நோக்கி நடந்தார் சங்கர்.